செல்போனில் விளையாடிய மாணவன் - தட்டிக் கேட்ட ஆசிரியருக்கு கத்திக் குத்து


செல்போனில் விளையாடிய மாணவன் - தட்டிக் கேட்ட ஆசிரியருக்கு கத்திக் குத்து
x
தினத்தந்தி 16 Feb 2022 5:09 PM IST (Updated: 17 Feb 2022 7:30 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அனுமந்தக்குடியை சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவர் காரைக்குடி அருகே  உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாமாண்டு படித்து வருகிறார்

இந்நிலையில், வகுப்பறையில் நேற்று பாடத்தை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த அந்த மாணவனை ஓவிய ஆசிரியர் கண்டித்து உள்ளார்.

ஆனால் அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து  அந்த மாணவன் வகுப்பறையில் இடையூறு செய்து வந்தார். இது குறித்து ஆசிரியர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.

பின்னர் அந்த மாணவனிடம் பெற்றோரை அழைத்து வரும் படி தலைமை ஆசிரியர் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளிக்கு வந்த அந்த மாணவைன் அம்மாவிடம் 

வகுப்பறையில் உங்கள் மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருப்பதால் மற்ற மாணவர்களின் பாடமும் பாதிக்கப்படுகின்றது. இதனால் உங்கள் மகனின் மாற்றுச் சான்றிதழை வாங்கி செல்லுங்கள் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

மகனை கண்டிக்கின்றேன் என்று அந்த மாணவனின் அம்மா தெரிவித்ததை தொடர்ந்து அவர் பள்ளிக்கு வர தலைமை ஆசிரியர் அனுமதித்தார்.

இந்த நிலையில் இன்று பள்ளிக்கு வந்த அந்த மாணவன் வகுப்பறையில் தனியாக இருந்த ஓவிய ஆசிரியரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினார்.

இதில் மார்பு, விலா உள்ளிட்ட  5-க்கும் மேற்ப்பட்ட இடங்களில் ஆசிரியருக்கு கத்திக் குத்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த  ஓவிய ஆசிரியரை அருகே இருந்த மாணவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சோமநாதபுரம் போலீசார் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவனை கைது செய்தனர்.

செல்போனில் விளையாடிய மாணவனை தட்டிக் கேட்ட ஆசிரியருக்கு கத்திக் குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story