தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ‘நல்ல செய்தியை விரைவில் அறிவிப்பேன்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ‘நல்ல செய்தியை விரைவில் அறிவிப்பேன்’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2022 12:24 AM IST (Updated: 17 Feb 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் நல்ல செய்தியை விரைவில் நான் அறிவிப்பேன் என்று புத்தக கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சென்னை புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:-

கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். உயரிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் கனவு இல்ல திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் பிரிவு இல்லம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டங்களில் 5 சென்ட் மனையில் 1,500 சதுர அடியில் வீடு கட்டித்தரப்படும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, பொதுத்துறை, சுற்றுச்சூழல்துறை என தனித்தனியாக சொல்லத்தொடங்கினால் நீண்டநேரமாகும்.

முக்கியமானவற்றை சொல்லவேண்டுமென்றால், திராவிட மொழிகளில் மூத்த மொழியாக விளங்கும் தமிழ் மொழியிலிருந்து தமிழின் அடையாளமாக விளங்கக்கூடிய பல்வேறு புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் பிற திராவிட மொழிகளில், மொழி பெயர்க்கப்படும். திசைதோறும் திராவிடம் என்ற திட்டத்தின்கீழ் தற்போது 6 புத்தகங்களை நான் வெளியிட்டுள்ளேன். மக்கள் காப்பியமாக விளங்கும் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், தமிழில் தலைசிறந்த தலித் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு, தோப்பில் முகமது மீரான் சிறுகதைகள், 50 தமிழ் சிறுகதைகள் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘கதாவிலாசம்', தமிழ்ப் புதின எழுத்தாளர் எப்சிபா ஜேசுதாசனின் 'புத்தம் வீடு' ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின் கீழ் மொழிபெயர்க்கப்பட்டுள்ள பா.ரா.சுப்பிரமணியம் மொழிபெயர்த்த ராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிகள் அல்லது தென்னிந்திய மொழிகளின் ‘ஒப்பிலக்கண நூல்', தமிழ்பாடநூல் கழகம் மற்றும் உலக ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு வெளியீடாக இன்று வெளியிடப்படுகிறது.

இந்த நூல்களை வெளியிட்டு அதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆட்சியின் சாதனை என்று சொன்னால் அது தமிழ் ஆட்சி. தமிழ்நாட்டுக்கான ஆட்சி. தமிழ்நாட்டு மக்களுக்கான ஆட்சி. ஒரேவரியில் சொன்னால் திராவிட ஆட்சி. நான் 2017-ம் ஆண்டு தி.மு.க.வின் செயல்தலைவராக பொறுப்பேற்ற நேரத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். பொதுநிகழ்ச்சிகளில் பொன்னாடைகள் மற்றும் பூங்கொத்துக்கு பதிலாக எனக்கு புத்தகங்களை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன்.

என்னை சந்திக்க வருபவர்கள் மட்டுமல்ல பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் செல்கிறபோது அங்கேயும் புத்தகங்கள் கொடுக்கும் பழக்கம் பரவிவருவதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இலங்கை யாழ்ப்பாணம் நூலகம் தொடங்கி பல மேலைநாடுகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள சிறிய நூலகங்களுக்கும் நான் வழங்கியிருக்கிறேன். பல்வேறு ஊர்களிலிருந்து நூலகங்கள் சார்பில் எனக்கு கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தமிழகத்தில் அறிவுத்திறன் மேம்பாடு எந்த அளவிற்கு பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பதை நான் உணர்கிறேன் அதற்கு நானும் ஒரு தூண்டுதலாக அமைந்திருக்கிறேன் என்பது உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த மகிழ்ச்சியோடு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். நான் எழுதியிருக்கக்கூடிய ‘‘உங்களில் ஒருவன்’’ என்ற நூலின் முதல்பாகத்தை இந்த மாதஇறுதியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். எனது 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை அதில் நான் பதிவுசெய்திருக்கிறேன்.

இளமைக்காலம், பள்ளி, கல்லூரி படிப்பு, அரசியல் ஆர்வம், முதலில் நடத்திய கூட்டம், அதில் முதலில் பேசிய எனது பேச்சு, திரையுலகம், திருமணம், மிசா காலத்தின் தொடக்கம் வரையில் அந்த பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 1976 வரையில் முதல் பாகமாக அதை நான் எழுதியிருக்கிறேன். விரைவில் இந்த புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு அந்த புத்தகம் நிச்சயம் வரும். ஆகவே நூல் ஆசிரியர் என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.

2007-ம் ஆண்டு இந்த புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைக்க நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் வருகைதந்த நேரத்தில், அப்போது நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள், ‘முதல்-அமைச்சர் வந்தால் அறிவிப்பு இல்லாமல் இருக்காது' என்று சொன்னார். ‘ஒரு எழுத்தாளன் சொன்னது வீண்போக விட்டுவிடக்கூடாது' என்று அதை குறிப்பிட்டுப் பேசிய நம்முடைய தலைவர், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடியை பபாசி அமைப்புக்கு வழங்கி இந்த விழாவில் பொற்கிழி வழங்கக்கூடிய நிலைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

அந்தவகையில் முதல்-அமைச்சராக வந்துள்ள நான் ஒரு அறிவிப்பை வெளியிடவேண்டும் என்றுதான் ஆசையோடு வந்தேன். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அந்த அறிவிப்பை இப்போது அறிவிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள். இன்னும் 2 நாட்கள் பொறுத்திருங்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

புத்தக கண்காட்சியில் ‘எம்.7-ல் தினத்தந்தி அரங்கு’

சென்னை புத்தக கண்காட்சி எப்போது நடத்தப்பட்டாலும் அதில் ‘தினத்தந்தி' சார்பில் ஒரு அரங்கு இடம் பெற்று இருக்கும். அதில் ‘தந்தி பதிப்பகம்' சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதோடு, வாசகர்கள் வாங்கி செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்படும்.

அந்த வகையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சியில், ‘எம்.7' என்ற வரிசையில் ‘தினத்தந்தி’ அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அரங்கில், வரலாற்றுச் சுவடுகள், ஆன்மிகம், இலக்கியம், தொல்லியல், மருத்துவம், சமையல், சினிமா, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகங்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு, ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திரபாபு உள்பட பல்வேறு முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்று இருக்கின்றன.


Next Story