தொற்று வேகமாக குறைவதால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது


தொற்று வேகமாக குறைவதால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது
x
தினத்தந்தி 17 Feb 2022 5:06 AM IST (Updated: 17 Feb 2022 5:06 AM IST)
t-max-icont-min-icon

தொற்று வேகமாக குறைவதால் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு வரும் ரூ.35 கோடி மதிப்பிலான ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை அரங்கப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

இந்த ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை அரங்கத்தை விரைவில் முதல்-அமைச்சர் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பார். இந்தியாவிலேயே இதுபோன்ற நவீன மருத்துவ கருவிகள் 74 இடங்களில் மட்டுமே உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 6 தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ளன.

இந்தியாவில் எந்த மாநில அரசு ஆஸ்பத்திரியிலும் இந்த ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை செய்யும் வசதி இல்லை. தற்போது தமிழகத்தில் தான் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அமைய இருக்கிறது. இதற்காக 6 டாக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு விசேஷமாக பயிற்சி பெற்றுள்ளனர்.

இதில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். புற்றுநோய் மிக ஆபத்தான ஒன்று. எனவே அதனை முதல் நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதற்காக அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியுடன் இணைந்து புற்றுநோய் பதிவேடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. 3 அல்லது 4-ம் நிலையில் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை அளித்து காப்பாற்றுவது அரிதானது. எனவே, முதல் மற்றும் 2-ம் நிலை புற்றுநோயாளிகளை கண்டறிவதற்கான பணிகளை தமிழக அரசு விரைவுபடுத்தி கொண்டிருக்கிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 49 லட்சத்து 79 ஆயிரத்து 565 பேர் பயன் அடைந்து உள்ளனர்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் 50 லட்சமாவது பயனாளிக்கு முதல்-அமைச்சரே, அவரது வீட்டுக்கு சென்று மருத்துவ சேவை வழங்குகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், அங்கேயே 188 அதிநவீன உயிர்காக்கும் உபகரணங்களுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார். அந்த வகையில் 1,491 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்க போகிறது.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 580 பேர் பயன்பெற்றுள்ளனர். இதற்காக அரசு சார்பில் 16 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்து 95 ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது. மக்களை தேடி மருத்துவத்தில் இதுவரை ரூ.168 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது.

நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில், அருகில் எந்தெந்த ஆஸ்பத்திரிகள் இருக்கிறது என்ற தகவல் அடங்கிய விளம்பர பலகைகளை ‘‘என்.எச்.எம்.” சார்பில் வைக்கப்பட இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜனவரியில் சாலை விபத்துகளில் 1,534 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் 765 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சரி பாதியாக உயிரிழப்பு குறைந்துள்ளது. விபத்து மரணம் இல்லாத தமிழகத்தை உருவாக்க தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைகிறது. எனவே தேவைப்படுவோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்தவகையில் நேற்று (நேற்று முன்தினம்) 80 ஆயிரம் அளவில் தான் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டது. இருந்தாலும், தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story