‘தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் வேலையை பா.ஜ.க. தொடங்கி விட்டது’ - அண்ணாமலை பரபரப்பு பேச்சு


‘தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் வேலையை பா.ஜ.க. தொடங்கி விட்டது’ - அண்ணாமலை பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 17 Feb 2022 5:31 AM IST (Updated: 17 Feb 2022 5:31 AM IST)
t-max-icont-min-icon

‘தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் வேலையை பா.ஜ.க. தொடங்கி விட்டது’ என்றும், ‘பொங்கல் பரிசு தொகுப்பு அவலத்தை மக்கள் மறக்கவே மாட்டார்கள்’ என்றும் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பரபரப்பாக பேசினார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை நேற்று மணலி, கொளத்தூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராயநகர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

இதில் மயிலாப்பூர் தெற்கு மாட வீதி பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக ‘தாமரை’ சின்னத்தில் அண்ணாமலை வாக்குகள் சேகரித்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணாமலை பேசியதாவது:-

கடந்த 70 ஆண்டுகளாகவே சென்னை நகரின் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவே இல்லை. ஆளும் அரசுகளும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. சிங்கார சென்னை என்று சொல்லிக்கொள்கிறார்களே, தவிர அதற்கான முயற்சிகளை செய்தபாடில்லை. மழைக்காலங்களில் சென்னை நிலைமை மோசமாகி போகிறது. ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு மழைவெள்ளத்தை ஆய்வு செய்கிறார்கள்.

இப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு மேயராக இருந்தபோது, அமைச்சராக இருந்தபோது, துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, சென்னை இப்படித்தான் இருந்தது. இப்போது முதல்-அமைச்சராக இருக்கும்போதும் சென்னை நிலைமை மோசமாகவே இருக்கிறது.

பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் நம்பிக்கையை உருவாக்க வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினார். ஆனால் அதில் சிலவற்றை கூட நிறைவேற்ற முடியாத அரசாக இந்த அரசு இருக்கிறது. குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவோம் என்றார். இப்போது குடும்பத்தலைவிகள் யார்? என்பது குறித்து ஆய்வு செய்துகொண்டிருப்பதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார்.

கூட்டுறவு நகைக்கடன், கல்விக்கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் என்ன ஆனது? என்றே தெரியவில்லை. எல்லாவற்றையும் விட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிரசாரத்தை காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார். எதற்கெடுத்தாலும் சென்னை எங்கள் கோட்டை என்று தி.மு.க. சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த கோட்டையில் ஓட்டை போடும் வேலையை பா.ஜ.க. தொடங்கிவிட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு என்று தரமற்ற பொருட்களை கொடுத்து ஏமாற்றியதை மக்கள் மறக்க மாட்டார்கள். ரூ.5 முதல் ரூ.10 வரையே செலவாகும் ஒரு துணிப்பைக்கு, ரூ.60 என்று கணக்குக்காட்டி ஊழல் செய்திருக்கிறார்கள். ஊழல் என்பது தி.மு.க.வுக்கு புதிதல்ல. எனவே மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. மத்திய அரசின் தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் அதன் பணிகள் விரிவு படுத்தப்பட்டதின் விளைவாகவே, மக்கள் அனைவரும் இன்றைக்கு நிம்மதியாக நடமாட முடிகிறது.

ஒருபக்கம் மத்திய அரசின் பா.ஜ.க. ஆட்சி, பிரதமர் நரேந்திரமோடியின் மகத்தான மக்கள் சேவை. இன்னொரு பக்கம் தி.மு.க. அரசின் 8 மாத அவல ஆட்சி. இந்த இரண்டில் எது வேண்டும்? என்று மக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பா.ஜ.க. அங்கீகாரம் பெற்றால் உண்மையிலேயே இந்த சென்னையை சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டுவோம்.

எனவே இந்தமுறை ஒரு நல்ல மாற்றத்துக்காக, எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒரு வாய்ப்பு தாருங்கள். எங்கள் வேட்பாளர்களுக்கு கட்ட பஞ்சாயத்து தெரியாது. யாரும் பெரும் பணக்காரர்களும் கிடையாது. எனவே ‘தாமரை’ சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த சென்னையின் தலையெழுத்தே மாறும். எத்தனை மழை வந்தாலும் சாலையில் தண்ணீர் தேக்கமில்லாத நிலைக்கு சென்னையை மாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.க. தேர்தல் கோட்ட பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், வர்த்தகரணி துணைத்தலைவர் சி.ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Next Story