தொழில் அதிபரிடம் பெண் குரலில் பேசி ரூ.14½ லட்சம் மோசடி ... டெல்லி ஆசாமிகள் இருவர் கைது


தொழில் அதிபரிடம் பெண் குரலில் பேசி ரூ.14½ லட்சம் மோசடி ... டெல்லி ஆசாமிகள் இருவர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 2:11 PM IST (Updated: 17 Feb 2022 2:11 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தொழில் அதிபரிடம் பெண் குரலில் பேசி ரூ.14½ லட்சம் மோசடி செய்த டெல்லி ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு கொண்டு, லண்டனில் இருந்து பெண் ஒருவர் பேசுவது போல பேசி, வடமாநில கும்பல் ஒன்று சென்னையைச்சேர்ந்த சிலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் நிறைய புகார்கள் வந்தன. தொழில் அதிபர் ஒருவரிடம் அந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் பேசி உள்ளனர்.

சென்னையில் நிலம் வாங்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக ரூ.5 கோடியுடன் டெல்லி வந்தபோது, சுங்க இலாகா அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டதாகவும், ரூ.14½ லட்சம் கொடுத்தால் சுங்க இலாகா அதிகாரிகள் விட்டு விடுவார்கள் என்றும், சென்னை வந்தவுடன் அந்த பணத்தை திருப்பித்தந்து விடுவேன் என்றும் கூறினர். அதை உண்மை என்று நம்பிய அந்த தொழில் அதிபர், ஆன்லைன் மூலம் ரூ.14½ லட்சத்தை மோசடி கும்பல் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். தான் மோசம் போனது தொழில் அதிபருக்கு தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி கும்பல் தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பெண் குரலில் பேசி மோசடி செய்த கும்பலைச்சேர்ந்தவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே சைபர் கிரைம் தனிப்படை போலீசார் டெல்லி சென்று, மோசடி நபர்கள் மஜித்சல்மானி (வயது 46), அவரது சகோதரர் ஷானு (36) ஆகிய இருவரை கைது செய்தனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட நைஜீரிய ஆசாமி இம்மானுவேல்சுக்கு என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story