பத்மநாபபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு


பத்மநாபபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு
x
தினத்தந்தி 17 Feb 2022 10:52 PM IST (Updated: 17 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

பத்மநாபபுரத்தில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

கன்னியாகுமரி,

திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

அந்த வகையில் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது.  விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை போன்றவை நடைபெற்ற நிலையில், பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு இன்று நடைபெற்றது.

இதற்கிடையில் கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபடுமாறு கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை 10.50 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்கிய நிலையில், பெண்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தனர்.

அதே சமயம் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியிலும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு  பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

Next Story