சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பு
கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
சென்னை,
கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக விமான பயணங்கள் மேற்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் தினமும் 180 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கை 34 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. கொரோனா 3-வது அலையால் ஜனவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரமாகவும், விமானங்களின் இயக்கம் 100 என்ற அளவிலும் இருந்தது.
இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. இதையடுத்து விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை, தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம், 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் போன்றவைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
இதனால், பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் 20 ஆயிரத்தை கடந்துள்ளது. விமானங்கள் இயக்கமும் அதிகரித்துள்ளது. அதேபோல், சர்வதேச விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இப்போது, சிறப்பு விமானங்களின் இயக்கமும் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story