சிறுமியின் கண்களுக்கு காலாவதியான சொட்டு மருந்து
காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறுமியின் கண்களுக்கு காலாவதியான சொட்டு மருந்து போட்டதை கண்டித்து அவரது தந்தை தனி ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறுமியின் கண்களுக்கு காலாவதியான சொட்டு மருந்து போட்டதை கண்டித்து அவரது தந்தை தனி ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டார்.
டாக்டர்கள் பரிசோதனை
காரைக்கால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). இவருக்கு கிருஷாலி (7) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை நேருவீதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த பள்ளியில், நேற்று நடந்த சிறப்பு மருத்துவ முகாமில், மாணவி கிருஷாலிக்கு பார்வை குறைபாடு இருப்பதால், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி பிரகாஷ் தனது மகள் கிருஷாலியை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் ஊழியர்கள், கிருஷாலியை பரிசோதித்து விட்டு பார்வை குறைபாடுக்காக சிறுமியின் கண்களில் சொட்டு மருந்து போட்டு விட்டு சிறிது நேரம் அங்கேயே அமர வைத்துள்ளனர்.
தந்தை போராட்டம்
அப்போது அந்த கண் மருந்து குப்பியை பார்த்த போது கடந்த டிசம்பர் மாதமே அது காலாவதியாகி இருப்பதை அறிந்து பிரகாஷ் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அங்கிருந்த டாக்டர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, 2 மாதம்தான் ஆகிறது. இதனால், பாதிப்பு ஒன்றும் இல்லையென அலட்சியமாக கூறியதாக தெரிகிறது.
இதனால் பயந்துபோன பிரகாஷ், மருத்துவமனை வளாகத்தில் தனி ஆளாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், காலாவதியான இந்த மருந்தை எத்தனை குழந்தைகளுக்கு போட்டார்கள் என்பது தெரியவில்லை. இதனால் பாதிப்பு ஏற்பட்டால் அரசு தான் பொறுப்பு. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story