பெயிலான மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்: பெரியார் பல்கலை கழக அதிகாரிகள் மீது வழக்கு


பெயிலான மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்:  பெரியார் பல்கலை கழக அதிகாரிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Feb 2022 1:18 AM IST (Updated: 19 Feb 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் பெயிலான 18 எம்.பில். மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் அதிகாரிகள் 2 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.



சேலம்,


சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவுபெற்றுள்ள 100க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்தி, அதனை மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிடுவதுடன், மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் எம்.பில்., (ஆய்வியல் நிறைஞர்) படித்து வரும் மாணவர்களுக்கு, 75 மதிப்பெண்ணுக்கு எழுத்துத்தேர்வும், 25 மதிப்பெண்ணுக்கு செய்முறைத்தேர்வும் நடத்தப்படுகிறது.

இதில், குறைந்தது 38 மதிப்பெண் பெற வேண்டிய எழுத்துத்தேர்வு விடைத்தாள்கள், இருகட்டங்களாக மதிப்பீடு செய்யப்படுகிறது. முதல் முறை மதிப்பீட்டிற்கும், இரண்டாம் கட்ட மதிப்பீட்டிற்கும் 10 மதிப்பெண்ணுக்குள் வித்தியாசம் வந்தால், இரண்டையும் கூட்டி அதன் சராசரி மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். அதேசமயம், 10 மதிப்பெண்ணுக்கு அதிகமாக வித்தியாசம் வந்தால், 3வது முறையாக மீண்டும் ஒருமுறை மதிப்பீடு செய்து அந்த மதிப்பெண், இறுதியாக கொள்ளப்படும். அந்த பட்டியலின்படி, தற்காலிக பணியாளர்கள் மூலம் கணினியில் மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்படும்.

தொடர்ந்து, அந்த பட்டியலும், கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டியலும், ஒரே மாதிரி உள்ளதா என சரிபார்த்து தேர்வு முடிவை வெளியிட வேண்டும். இதற்கு பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளரும், உதவி பதிவாளருமே பொறுப்பாளர்கள் ஆவார்கள்.

இதனிடையே கடந்த 2018ம் ஆண்டு, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 5 கல்லூரிகளில் எம்.பில். எழுத்துத்தேர்வு நடந்தது. இதில், கலந்து கொண்டு தேர்வெழுதிய மாணவர்களில், தேர்ச்சி பெறாத 18 மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் வழங்கி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், சேலம் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் துணை பதிவாளர் செந்தில்குமார் மற்றும் உதவி பதிவாளர் பிரேமா ராணி ஆகியோர், ஆதாயம் பெற்று கொண்டு பெயிலான 18 மாணவர்களுக்கு, தேர்ச்சி மதிப்பெண் வழங்கியது தெரியவந்தது. குறிப்பாக, எழுத்துத்தேர்வில் 38க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம், கூடுதலாக மதிப்பெண் வழங்கி, அவர்கள் 60 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக பெற்று தேர்ச்சி பெற்றதாக, முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, துணை பதிவாளர் செந்தில்குமார் மற்றும் உதவி பதிவாளர் பிரேமாராணி ஆகியோர் மீது, கூட்டுசதி, மோசடி உள்பட 6 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பெயிலான எம்.பில். மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் வழங்கி மோசடி செய்ததாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் 2 பேர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது, பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story