மொபட்டில் வைத்திருந்த ரூ50 ஆயிரம் திருட்டு
கிருமாம்பாக்கத்தில் மொபட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற 6 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருமாம்பாக்கத்தில் மொபட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்ற 6 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மீனவர் மனைவி
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு வம்பாபேட்டை சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவர் வெளிநாட்டில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (வயது 31), வம்பாபேட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று மதியம் தமிழரசி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கிருமாம்பாக்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு பணம் எடுக்க வந்தார். வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு, அதனை மொபட் சீட்டின் கீழ் உள்ள பெட்டியில் வைத்தார். பின்னர் கிருமாம்பாக்கம் அரசு பள்ளிக்கூடம் அருகில் உள்ள அடகு கடையில் தான் அடகு வைத்த நகையை மீட்பதற்காக மொபட்டில் தமிழரசி சென்றார்.
ரூ.50 ஆயிரம் திருட்டு
அடகு கடையின் முன்பு தனது மொபட்டை நிறுத்திவிட்டு, பெட்டியில் வைத்திருந்த பணத்தில் ரூ.50 ஆயிரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி ரூ.50 ஆயிரத்தை பெட்டியில் வைத்துவிட்டு அடகு கடைக்கு நகையை மீட்க சென்றார்.
நகையை மீட்டுக்கொண்டு சிறிது நேரம் கழித்து வந்து மொபட் பெட்டியை திறந்துபார்த்தபோது, அதில் இருந்த ரு.50 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழரசி, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தார். ஆனால் பணம் மாயமானது பற்றிய தகவல் தெரியவில்லை.
6 பேர் கைவரிசை
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் தமிழரசி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு நடந்த பகுதியில் உள்ள அடகு கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 வாலிபர்கள் தமிழரசியின் மொபட் பெட்டியை லாவகமாக திறந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது.
அந்த வாலிபர்கள் வங்கி பகுதியில் இருந்து தமிழரசியை பின்தொடர்ந்து வந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story