நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.வின் வெற்றிக்காக தேர்தல் ஆணையம் நடத்திய நாடகம்: அண்ணாமலை


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.வின் வெற்றிக்காக தேர்தல் ஆணையம் நடத்திய நாடகம்: அண்ணாமலை
x
தினத்தந்தி 20 Feb 2022 3:13 AM IST (Updated: 20 Feb 2022 3:13 AM IST)
t-max-icont-min-icon

‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.வின் வெற்றிக்காக தேர்தல் ஆணையம் நடத்திய நாடகம்’ என அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆளுங்கட்சிக்கு சாதகமாக...

மக்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு நடுவே நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மாநில தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை, மாட்சிமையை, கேள்விக்குரியதாக மாற்றியிருக்கிறது. மாநிலத்தில் அரசு எந்திரங்கள் எந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத்தெளிவாக தெரிகிறது. ஆளும் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கேற்ப, அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு நகர்வும் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே திட்டமிடப்பட்டு, நடைபெற்ற ஒரு தேர்தல் தற்போது நடைபெற்ற தேர்தல் என்றால் அது மிகையில்லை.

தி.மு.க.வினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலிலேயே அச்சமின்றி பண வினியோகம் செய்தனர். ஆளுங்கட்சிக்கு சாதகமாக, பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டது. பல இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் மாலை 5 மணிக்கு சாத்தப்பட்டு விட்டன. தி.மு.க.வை சேர்ந்த நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அவசரம் இல்லாமல் பொறுமையாக உள்ளே இருந்து அவர்கள் தங்கள் ‘நல்ல’ வாக்குகளை பதிவு செய்கிறார்கள். மாநிலம் முழுவதும் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், சரிவர இயங்கவில்லை. ஓரிரு மணி நேரம் வரை வேலை செய்த எந்திரங்கள் பின்னர் பழுதடைந்ததால் குழப்பமான சூழல் நிலவியது. மக்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சொல்லி வைத்தார் போல மாநிலம் முழுவதும் பல இடங்களில், இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம்

பல இடங்களில் ஆளும் கட்சியினரின் அத்துமீறலை தட்டிக்கேட்க வந்த பிற கட்சியினரை, ஆளும் தி.மு.க.வினர் தாக்குவதும் காயப்படுத்துவதும் காவல்துறையினரின் கண்முன்னே நடைபெற்றது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த பெரும்பாலோனோருக்கு இப்போது வாக்களிக்க உரிமை மறுக்கப்பட்டது. காரணம் வாக்காளர் பட்டியலில் இருந்த அவர்களின் பெயர்கள் காரணமில்லாமல் நீக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வடசென்னை பகுதியில் பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து வாக்களிக்கும் வட இந்திய குடும்பங்களின் வாக்குகள் கொத்துகொத்தாக நீக்கப்பட்டுள்ளன.

சென்னை உட்பட மாநிலம் முழுவதும் கும்பல் கும்பலாக ஆட்கள் மாலை 3 மணிக்கு பிறகு வாக்குச்சாவடி மையத்தில் முன் நிறுத்தப்பட்டனர். இவர்கள் ஆளும் கட்சியின் ஆசியுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வந்து கள்ள வாக்குகளை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருந்தனர். இப்படி வெளிப்படையாக நடைபெற்றதை கண்டிக்க எவரும் இல்லை. இது பற்றிய ஏராளமான வீடியோ ஆதாரங்கள் எங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் கண்களில் இது படாமல் போனது மிகுந்த வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

தேர்தல் ஆணையத்தின் நாடகம்

ஆக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆளும் கட்சியினர் எதிர்பார்த்தபடி, தி.மு.க.வின் வெற்றிக்காக, திரைக்கதை வசனம் எழுதப்பட்டு, மாநில தேர்தல் ஆணையத்தால் திறமையாக நடத்தப்பட்ட ஒரு நாடகம். இதை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story