நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு 90 சதவீதம் உறுதி: ஜெயக்குமார்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு 90 சதவீதம் உறுதி என்று ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் தனது பேட்டியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் மனநிலை குறித்து பேசுகையில், தி.மு.க.வின் 9 மாத ஆட்சியில் ஒன்பதாண்டு துன்பங்களை அனுபவித்த மனநிலை மக்கள் முகத்தில் தெரிவதாகவும், தி.மு.க. மீதான பெண்கள் மற்றும் மாணவர்களின் வெறுப்பு அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தி.மு.க.வினர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து தங்களை ஏமாற்றி விட்டதாகவும், தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள், பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படாதது பெண்கள் மத்தியில் மனமாற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும், மாணவர்கள் மத்தியில் ‘நீட்’ தேர்வு ரத்து பிரச்சினை தி.மு.க. மீதான வெறுப்பை அதிகரித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு குறித்தான கேள்விக்கு பதில் அளிக்கையில், தி.மு.க. ஆட்சி மீதான பொதுமக்களின் கோபம் வேறு எந்த கட்சிக்கும் போக வாய்ப்பில்லை என்றும் அவை அனைத்தும் எங்களுக்குதான் சாதகம் என்பதால் நாங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுவோம் என்றும் மீதி இடங்களை தோழமை மற்றும் கூட்டணி கட்சிகள் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தாக்கல் செய்யப்போகும் நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் கருத்து தெரிவிக்கையில், வரும் நிதிநிலை அறிக்கை தமிழர்களை மொட்டை அடிக்கும் நிதிநிலையாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளார்.
மேலும், மாநில நலன்களை அ.தி.மு.க. அடகு வைத்து விட்டதா? உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள அவர், இறுதியில் இன்றைய அரசியல் சூழலை விளக்கும் வகையில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
Related Tags :
Next Story