ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய வெற்றி: பிரேமலதா விஜயகாந்த்
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய வெற்றி என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு, டாக்டரின் ஆலோசனைப்படி வாக்களிக்க வரவில்லை. இதேபோல், கடந்த ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களித்து விட்டு வெளியே வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த முறை அனைத்து கட்சிகளும் தனித்துதான் போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் இதுதான் முதல் முறை. ஓட்டு பிரிவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தேர்தல் முறையாக, எந்த விதமான ஆட்சி, அதிகார, பண பலத்துக்கு மீறி ஜனநாயக முறைப்படி நடந்தால், தே.மு.தி.க. போன்ற கட்சிகளுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். இதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். தே.மு.தி.க.வின் வாக்கு வங்கியை நிரூபிக்கவே தமிழகம் முழுவதும் போட்டியிட்டிருக்கிறோம். நியாயமான முறையில் தேர்தல் நடந்தால் எங்கள் கட்சிக்கு நியாயமான வாக்கு சதவீதத்தை மீண்டும் நிரூபிக்க முடியும். ஆனால் தேர்தல் முடிவு எப்படி வருகிறது என்பதை பார்ப்போம்.
வாக்கு சதவீதம் காலையில் குறைந்திருப்பதை பார்க்கும் போது, மக்களுக்கு ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லை. வெறும் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். அதுக்கு ஏன் நாம் ஓட்டு போட வேண்டும் என்ற மனவேதனை, வெறுப்பின் உச்சம் தான் வாக்கு சதவீதம் குறைவுக்கு காரணம். ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, மத்தியில் இருக்கும் கட்சியும் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கிறார்கள். இனிமேலாவது ஜனநாயக ரீதியில் நியாயமாக தேர்தல் நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story