தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு


தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 Feb 2022 5:59 AM IST (Updated: 20 Feb 2022 5:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது. மாநிலம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை மாநகராட்சியில் 43.59 சதவீதமே ஓட்டுகள் பதிவானது.

தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,489 பேரூராட்சிகளில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு

மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 820 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

ஏற்கனவே, 218 வார்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு பெற்ற நிலையில், மீதமுள்ள வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மந்தமாக தொடங்கியது

மொத்தம் 2 கோடியே83 லட்சம் வாக்காளர்கள்ஓட்டுபோட தகுதிபெற்றிருந்தனர். சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்களுக்கு தனித்தனியாக உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், கையில் கிருமிநாசினியும் (சானிடைசர்) தெளிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காட்டியபிறகு, அவர்களுக்கு கையுறை வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஏனைய 20 மாநகராட்சிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையே தென்படவில்லை. ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டுவிட்டு சென்றதை காண முடிந்தது.

சென்னையில் மிகக்குறைவு

அதேநேரத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஓரளவு வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டதை காண முடிந்தது. காலை 9 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 8.21 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. அதிலும், சென்னையில் மிகக்குறைவாக 3.96 சதவீத வாக்குகளே பதிவாகின.

ஆனால், இடையில் வாக்குப்பதிவு சற்று விறுவிறுப்பு அடைந்தது போல் தெரிந்தது. வெயில் வாட்டி வதைத்தாலும், அதை பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட தொடங்கினார்கள். பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது.

மின்னணு எந்திரத்தில் கோளாறு

வாக்குப்பதிவு மந்தமாக தொடங்கியபோதும், காலை 11 மணி நிலவரப்படி, 21.69 சதவீத வாக்குகள் பதிவாகின. சென்னையிலும் 17.88 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்காளர்கள், ஓட்டுப்போட வருவதும், போவதுமாகத்தான் இருந்தனர். வரிசை என்பது சில இடங்களில் மட்டுமே தென்பட்டது.

ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், ஓட்டுப்பதிவு தாமதமானது. அதற்கான என்ஜினீயர்கள் வந்து வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பழுதை சரிசெய்ய முயன்றனர். சரிசெய்யப்பட்டவுடன் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. ஆனால், சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள கோளாறை சரிசெய்ய முடியாததால், உடனடியாக மாற்று எந்திரம் கொண்டுவரப்பட்டு, சிறிய இடைவேளைக்கு பிறகு வாக்குப்பதிவு தொடர்ந்தது. இதனால், வாக்காளர்கள் அவதி அடைந்தனர்.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பதற்றம் நிறைந்ததாக 5,920 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், 25 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. 5 ஆயிரம் வாக்குச்சாவடிகள் இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டன.

அதாவது, சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கட்டுப்பாட்டு அறையின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டன. இதை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், ஆணைய செயலாளர் சுந்தரவல்லி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கொரோனா நோயாளிகளுக்கும் வாய்ப்பு

மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 35.34 சதவீதம் வாக்குகளும், சென்னையில் 23.42 சதவீத வாக்குகளும் பதிவாகின. தொடர்ந்தும், மந்தமாகவே ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மதியம் 3 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 47.18 சதவீத வாக்குகளே பதிவாகின. சென்னையை பொறுத்தவரை 31.89 சதவீத ஓட்டுகளே பதிவாகி இருந்தன.

அதன்பிறகு, ஓட்டுப்போட வந்த வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தாலும், எதிர்பார்த்த அளவு வாக்கு சதவீதம் பதிவாகவில்லை. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அதன்பிறகு, கடைசி ஒரு மணி நேரம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓட்டுப்போட வசதி செய்யப்பட்டிருந்தது. உரிய பாதுகாப்புடன் அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர்.

டோக்கன்

அதே நேரத்தில், வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். சில வாக்குச்சாவடிகளில், கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோயாளிகள் யாரும் ஓட்டுப்போட வரவில்லை.

இந்த நேரத்தில், ஓட்டுப்போட வந்தவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால், ஒருசில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

61 சதவீத வாக்குப்பதிவு

இறுதியாக, மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சிறுசிறு அசம்பாவித சம்பவங்கள் ஆங்காங்கே ஒருசில இடங்களில் நடைபெற்றாலும், ஒட்டுமொத்தமாக அமைதியாகவே தேர்தல் நடைபெற்று முடிந்தது.

தமிழகம் முழுவதும் 60.70 சதவீத வாக்குகளும், சென்னையில் 43.59 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தன.

தாம்பரத்திலும் 49.98 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.

அதன்பிறகு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து ‘சீல்' வைக்கப்பட்டன.

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

பின்னர், அந்தந்த இடங்களுக்கு அருகே இருந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக லாரிகளில் கொண்டுசெல்லப்பட்டு, அங்குள்ள அறையில் வார்டு வாரியாக பெட்டிகளை முறைப்படுத்தி பிரித்து வைத்து, அறைக்கதவுகள் ‘சீல்' வைத்து பூட்டப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பாக 15 மண்டலங்களிலும் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணும் நாளான வரும் 22-ந் தேதி (நாளை மறுதினம்) காலை இந்த அறைக்கதவில் உள்ள ‘சீல்'கள் உடைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டுவரப்படும்.

காலை 8 மணி முதல் வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.



Next Story