சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் - ரா.முத்தரசன் வலியுறுத்தல்


சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் - ரா.முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Feb 2022 11:09 PM IST (Updated: 20 Feb 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என ரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள தில்லை நடராஜர் திருக்கோவில் தீட்சிதர்கள் பக்தர்களிடையே பாகுபாடு மற்றும் சாதி தீண்டாமை காட்டுவது தொடர்ந்து நீடித்து வருகிறது.

வரலாற்று தொன்மையும், திராவிடக் கட்டிடக்கலையின் பெருமையும் கொண்ட தில்லை நடராஜர் திருக்கோவில் நிர்வாகத்தை, தமிழக அரசு தனி சட்டம் இயற்றி, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கொண்டு வருவது காலத்தின் தேவையாகும்.

கடந்த 13.02.2022 சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்கு சென்ற பெண் பக்தரை, தீட்சிதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடுத்து, அவரது சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தி, அவமதித்துள்ளனர். மேலும் கோயிலுக்கு உள்ளே நிற்க விடாமல் தள்ளி வெளியேற்றியுள்ளனர்.

இது தொடர்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாமல் இருப்பது சரியல்ல, அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டனை பெறும் வகையில் வழக்கை நடத்த வேண்டும்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக சட்டம் நிறைவேற்றி, அதன்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்து, சமூகநீதி வழங்கியுள்ள தமிழக அரசு, சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தையும், அதன் உடைமைகளையும் கையகப்படுத்த தனி சிறப்புச் சட்டம் நிறைவேற்றி, அதன் முழு நிர்வாகத்தையும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இங்கு பணிபுரியும் தீட்சிதர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

இவ்வாறு ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story