நெல்லையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதாவினர்


நெல்லையில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதாவினர்
x
தினத்தந்தி 21 Feb 2022 4:12 AM IST (Updated: 21 Feb 2022 4:12 AM IST)
t-max-icont-min-icon

பெண் வேட்பாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லையில் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.

பெண் வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நெல்லை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட நெல்லை டவுன் மந்திரமூர்த்தி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அந்த வார்டில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மாரியம்மாள் என்பவர் ஓட்டுப்பதிவு முடிவடையும் நேரத்தில் பார்வையிட சென்றார்.

அப்போது அவருக்கும், தி.மு.க.வை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மாரியம்மாள் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பா.ஜனதா நிர்வாகிகள் மாரியம்மாளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் வேட்பாளர் மாரியம்மாளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று காலையில் பா.ஜனதாவினர் மாவட்ட தலைவர் மகாராஜன், பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி, வக்கீல் பாலாஜி கிருஷ்ணசாமி, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் பிரமநாயகம் உள்பட ஏராளமானோர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

நடவடிக்கை

அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதற்கு ஒருநாள் அவகாசம் வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story