தென்காசி அருகே வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார்


தென்காசி அருகே  வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார்
x
தினத்தந்தி 21 Feb 2022 8:28 AM IST (Updated: 21 Feb 2022 8:28 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார் எழுந்ததையொட்டி நடவடிக்கை எடுக்க கோரி திமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் புளியங்குடி நகராட்சி மற்றும் வாசுதேவநல்லூர், ராயகிரி, சிவகிரி ஆகிய 3 பேரூராட்சிகளில் பதிவான வாக்குப் பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் உதவியுடன் நள்ளிரவில் கார் ஒன்று உள்ளே சென்றுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள், கட்சியினர் வாக்கு எண்ணும் மையத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் போலீஸ் உதவியுடன் திமுகவினர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றதறாக குற்றம் சாட்டினர்.

இதையடுத்து திமுக மற்றும் போலீசாரை கண்டித்தும் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனிடையே வாக்கு எண்ணும் மையத்திற்குள் போலீஸ் ஜீப்பும் அதனருகே டி.என்.79 கு 5550 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றும் நின்று கொண்டிருந்தது.

போலீஸ் பாதுகாப்பையும் மீறி திமுகவினர் உள்ளே சென்றதாக அவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர். உயரதிகாரிகள் வரும்வரை அங்கிருந்து செல்லமாட்டோம் எனக் கூறினர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் வீராசாமி செட்டியார் கல்லூரியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புளியங்குடி - கோவில்பட்டி சாலையில் அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story