கார் ஓட்டி பழகும் போது லாரி மீது மோதியதில் மாணவன் பலி


கார் ஓட்டி பழகும் போது லாரி மீது மோதியதில் மாணவன் பலி
x
தினத்தந்தி 21 Feb 2022 9:50 AM IST (Updated: 21 Feb 2022 9:50 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே நண்பர்களுடன் கார் ஓட்டி பழகும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற லாரி மீது மோதியதில் மாணவர் பலியானார்.

திருப்பூர்,

பல்லடம் அருகே நண்பர்களுடன் கார் ஓட்டி பழகும் போது சாலையோரம் நின்ற லாரி மீது மோதியதில் மாணவர் பலியானார், மேலும் இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

பல்லடம் பச்சாபாளையத்தை சேர்ந்த, குமார் என்பவரது மகன்கள் தமிழ்வாணன் (17), ஸ்ரீதர் (15) ஆகிய இருவரும் பல்லடம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் 11 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களது உறவினருக்கு சொந்தமான காரில், நண்பர்கள் கோபி சங்கர் (17), லெனின் ராஜ் (17), ஹரி கிருஷ்ணன் (17), தினேஷ் குமார் (17), ஆகிய 6 பேரும் கார் ஓட்டிப் பழகுவதற்காக பல்லடம் - மங்கலம் ரோட்டில் சென்றுள்ளனர்.

அம்மாபாளையம் பிரிவு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டின் வலது புறம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறமாக அதிவேகமாக மோதி அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த தமிழ்வாணன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பலியானார். உடன் இருந்த 5 பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அந்த வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் பலியான தமிழ்வாணனின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story