தமிழக பட்ஜெட் குறித்து தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை!
ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சாலை மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில்துறையினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
சென்னை,
தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் வெளியாக உள்ள முதல் முழு பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக, பல்வேறு தரப்பினரிடையே இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சிறுகுறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், அனைத்து துறை செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டத்தில் தொழிற்சாலை மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிகளுடன் அமைச்சர் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறு, குறு தொழில்துறையினரின் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார்.
அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அடிப்படையில், பட்ஜெட்டில் புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. மேலும், எங்கெல்லாம் புதிய தொழில் நிறுவனங்கள் அமைய உள்ளன மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும்.
கொரோனா காலகட்டத்தில் சிறு நிறுவனங்கள், பெரிய இழப்பை சந்தித்தன. அதிலிருந்து அந்நிறுவனங்கள் மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டு முதல் அமைச்சரின் ஆலோசனைக்கு கொண்டு செல்லப்படும்.
இன்று பிற்பகலில் இன்னொரு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.அதில் வணிகர்கள் சங்கத்தினர், சிறிய கடைகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து அதன் அடிப்படையில் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story