முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதான வழக்கு ரத்து : சென்னை ஐகோர்ட்டு


முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீதான வழக்கு ரத்து : சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 21 Feb 2022 1:04 PM IST (Updated: 21 Feb 2022 1:04 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 2021 சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. வின் தற்போதைய கோவில்பட்டி எம்.எல்.ஏ. வுமான கடம்பூர் சி ராஜூ மீது கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலின் போது தமிழக தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் மார்ச் 12, 2021 அன்று தேர்தல் அதிகாரி மாரி முத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி எம். நிர்மல் குமார் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இம்மனுவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​தானும் தனக்குத் தெரிந்தவர்களும் தேர்தல் பறக்கும் படையைத் தடுக்கவோ, மிரட்டவோ இல்லை எனவும், அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும்  கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  மனுவை விசாரித்த  நீதிபதி, ஐ.பி.சி. பிரிவுகள் 353 (பொது ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் தாக்குதல் அல்லது தடுத்தல்) மற்றும் 506 (ஐ) (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்த மனுவை ஏற்று சென்னை ஐகோர்ட்டு  உத்தரவிட்டது.

Next Story