ஜெயக்குமார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டம்
நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளுக்கு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சில மையங்களில் கள்ள ஓட்டு பிரச்சினை எழுந்தது. இதனால் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது.
ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள், தி.மு.க. தொண்டர் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஜெயக்குமாரும் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த சூழலில் அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, 40 பேர் அடங்கிய போலீசார் இன்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் அருகே அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அமைச்சர் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக ஏராளமான அதிமுகவினர் குவிந்த நிலையில் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு ஜெயவர்தன் தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story