788 பேருக்கு கொரோனா: ஈரோட்டில் மட்டும் ஒருவர் உயிரிழப்பு


788 பேருக்கு கொரோனா: ஈரோட்டில் மட்டும் ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Feb 2022 3:14 AM IST (Updated: 22 Feb 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 69 ஆயிரத்து 482 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 473 ஆண்கள், 315 பெண்கள் என மொத்தம் 788 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 51 நாட்களுக்கு பிறகு பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 191 பேரும், கோவையில் 115 பேரும், செங்கல்பட்டில் 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக கள்ளக்குறிச்சி, ராணிபேட்டையில் தலா இருவரும், அறியலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

12 வயதுக்குட்பட்ட 127 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 267 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 27 லட்சத்து 91 ஆயிரத்து 708 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 45 ஆயிரத்து 717 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1,604 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 763 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 265 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

ஒருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 74 வயது முதியவர் ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 37 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 981 பேர் கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 692 பேர் ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 14 ஆயிரத்து 33 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story