334 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று மாலை தெரியும்


334 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியை கைப்பற்றப்போவது யார்? இன்று மாலை தெரியும்
x
தினத்தந்தி 22 Feb 2022 4:39 AM IST (Updated: 22 Feb 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

334 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய சென்னை மாநகராட்சியை எந்த கட்சி கைப்பற்றப்போகிறது என்பது இன்று மாலை வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரியவரும்.

சென்னை,

இந்தியாவிலேயே மிக பழமையான மாநகராட்சிகளில் சென்னையும் ஒன்று. கடந்த 1,688-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி கிழக்கிந்திய கம்பெனியின் உரிமை சாசனத்தின்படி மதராசப்பட்டினத்தில் சென்னை நகராண்மை கழகம் உருவானது. இதுதான் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

சென்னை நகராண்மை கழகத்துக்கு தலைமையிடமாக ஒரு கட்டிடம் வேண்டும் என முதல் மேயரான நத்தேனியல் ஹாக்கன்சன் கோரிக்கை வைத்தார். இதை ஏற்று கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ரூ.7½ கோடியில் புதிய கட்டிடம் சென்னை முத்தியால் பேட்டை எர்.ர.பாலு செட்டி தெருவில் உள்ள பூங்கா அருகில் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு ரிப்பன் பிரபு மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துணை மேயர் பதவி

அந்தவகையில் கடந்த 1936-ம் ஆண்டு நகராண்மை கழக உறுப்பினர்களில் இருந்து துணை நகர மேயர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை நகர துணை மேயர் பதவி ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம் முதல் துணை மேயராக வந்தவர் எம்.பக்தவச்சலம் ஆவார். இந்தியா விடுதலை பெற்ற பின்னர் கடந்த 1948-ம் ஆண்டு சென்னையுடன் மேலும் பல பகுதிகள் இணைக்கப்பட்டு, நகராட்சி சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து 40 வட்டங்களாக இருந்த சென்னை நகரம் 50 வட்டங்களாக விரிவபடுத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலில் உறுப்பினர்கள் பதவிக்கு தாழ்த்தப்பட்டவர்களில் இருந்து 5 உறுப்பினரும், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 4 பெண்களும், வர்த்தக சங்கங்களில் இருந்து 8 உறுப்பினர்களும், ஒரு பல்கலைக்கழக உறுப்பினரும், மூப்பர்கள் 5 பேரும், சிறப்பு நகராட்சி உறுப்பினர்கள் 3 பேர் உள்பட 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

200 வார்டுகள்

இதைத்தொடர்ந்து கடந்த 1959-ம் ஆண்டு சென்னையுடன் மேலும் பல பகுதிகளை இணைத்து 100 வட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு தொடங்கிய விரிவாக்கம் கடந்த 1988-ம் ஆண்டு 10 மண்டலமாகவும், 155 வார்டுகள் கொண்டதாகவும் பிரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் புதிய விரிவாக்கத்துடன் 15 மண்டலங்கள் மற்றும் 200 வார்டுகளாவும் விரிவடைந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 1973-ம் ஆண்டுக்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மேயரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நடைமுறை கடந்த 1973-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. அன்றுமுதல் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுகை குழு இல்லாமல், தனி அலுவலர்களின் மேற்பார்வையில் 1996-ம் ஆண்டு வரை (23 ஆண்டுகள்) செயல்பட்டு வந்தது.

முதல் முறையாக அ.தி.மு.க.

23 ஆண்டுகளுக்கு பின்னர், மாநில அரசு எடுத்த நடவடிக்கையால், சென்னை மாநகராட்சி மன்றம் மீண்டும் செயல்பட தொடங்கியது. மாநகராட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, உறுப்பினர்களின் பதவி காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் மேயர்களை தேர்ந்தெடுத்தனர். புதிய மேயராக தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

விடுதலைக்கு பின்னர் 1959-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு வரை தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள் மாநகராட்சியை கைப்பற்றி வந்தன. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் தேர்தல் நடைபெற்றது. மேயரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்த இந்த தேர்தலில் அ.தி.மு.க. முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 48-வது மேயராக சைதை துரைசாமி (அ.தி.மு.க.) பொறுப்பேற்றார்.

6 ஆண்டுகளுக்கு பின்னர்...

அவரது பதவிகாலம் கடந்த 2016-ம் ஆண்டு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு காரணங்களால் கடந்த 6 ஆண்டுகளாக பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தமிழக அரசால் நியமிக்கப்பட்ட கமிஷனர்கள் சென்னை மாமன்றத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் அறிவித்தது.

அந்தவகையில் கடந்த 19-ந் தேதி 200 வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. பிற்பகல் நேரத்தில் அனைத்து வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பின்னரே பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியை எந்த கட்சி கைப்பற்றும் என்பது தெரியவரும். இதைத்தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு

சென்னை நகராண்மை கழகத்தில் கடந்த 1919-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் மூலம் பெண்களுக்கு நகராண்மை கழக உறுப்பினர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்தியாவில் பெண்களுக்கு 33.3 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என கடந்த மார்ச் 2010-ம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு மசோதா தாக்கல் செய்தது.

தற்போது வரை இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டிருந்தாலும், கடந்த 2011-ம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையம் சென்னை மாநகராட்சி தேர்தலில் 33.3 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. இதையடுத்து தற்போது நடைபெற்ற தேர்தலில் 50 சதவீத பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக சென்னை மேயர் பதவியும் பெண்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 பெண்கள் இந்த மேயர் பதவியை அலங்கரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story