மதுக்கூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல்..!


மதுக்கூர் அருகே அரசு பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல்..!
x
தினத்தந்தி 22 Feb 2022 8:03 AM IST (Updated: 22 Feb 2022 8:03 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியரின் மீதான புகாரை மறுவிசாரணை செய்ய கூறி பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (53). இவர் மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அந்த பள்ளியில் நடந்த 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வின்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் திருப்புதல் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, தேர்வு மையத்தில் பணியில் இருந்த ஆசிரியர் ராஜ்குமார் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் ராஜ்குமாரை கடந்த 17ம் தேதி போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் அதே மதுக்கூர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் ராஜ்குமார் மீது தவறில்லை. அவர் மிகவும் நல்ல ஆசிரியர். அவர்மீது சொல்லக்கூடிய புகாரை முறையாக விசாரிக்கவில்லை. எனவே இந்த வழக்கை மறு விசாரணை செய்து ஆசிரியர் ராஜ்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி அருகே பட்டுக்கோட்டை - மன்னார்குடி சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே சம்பவ இடத்திற்கு பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், போலீஸ் டி.எஸ்.பி. செங்கமலக்கண்ணன் விரைந்து வந்து சாலை மறியல் போராட்டம் நடத்திய மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் மாணவிகள்  மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பட்டுக்கோட்டை - மன்னார்குடி சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story