காதலனுடன் தனியாக பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி.. மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர்
அவினாசி அருகே காதலனுடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் தனியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவினாசி போலீஸ் நிலைய போலீஸ்காரர் சுப்பிரமணியம், அவர்களிடம் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டார். பின்னர் அந்த மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து அவர் செல்போனில் அந்த மாணவியை தொடர்பு கொண்டு, உங்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமானால் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
உடனே அந்த பெண்ணின் தாயார், மாணவியை போல் போலீஸ்காரரிடம் செல்போனில் பேசி வெள்ளியம்பாளையம் குட்டை பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அவர் அங்கு சென்றார். அங்கு மறைந்திருந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்கள் போலீஸ்காரரை பிடித்து போலீஸ்காரராகிய நீங்களே இப்படி செய்யலாமா என்று கேட்டுள்ளனர்.
இதில் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கினர்.
இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் விரட்டி தாக்கியுள்ளனர்.
இதை அறிந்த அவினாசி போலீசார் விரைந்து சென்று போலீஸ்காரரை மீட்டு அவினாசி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே போலீஸ்காரரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ்காரர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story