வெற்றியை கண்டு கர்வம் கொள்ளவில்லை, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம்: மு.க ஸ்டாலின்
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் 75%-க்கும் மேலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளில் அனைத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. திமுகவின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல் அமைச்சருமான மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; - “ கடந்த 9 மாத கால ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழ்தான் இந்த வெற்றி. திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம் தான் இந்த வெற்றி.
வெற்றியை கண்டு கர்வம் கொள்ளவில்லை. மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வழங்கிய மக்களுக்கு நன்றி. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வெற்றியை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்.
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தை கைப்பற்றியுள்ளோம். தொடர்ந்து எந்த நேரத்திலும் மக்களை சந்திக்க காத்திருக்கிறேன். தயாராக இருக்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எந்த வித புகாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story