தனித்து போட்டியிட்ட பா.ஜ.க. 308 வார்டுகளை கைப்பற்றியது 11 மாநகராட்சிகளில் கால் பதித்துள்ளது


தனித்து போட்டியிட்ட பா.ஜ.க. 308 வார்டுகளை கைப்பற்றியது 11 மாநகராட்சிகளில் கால் பதித்துள்ளது
x
தினத்தந்தி 23 Feb 2022 5:25 AM IST (Updated: 23 Feb 2022 5:25 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ஜ.க. 308 வார்டுகளை கைப்பற்றி உள்ளது. 11 மாநகராட்சிகளில் வெற்றி வாகை சூடி கால் பதித்துள்ளது.

சென்னை,

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க., தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தனித்து களம் இறங்கினர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

308 வார்டுகளில் வெற்றி

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், தமிழகம் முழுவதும் 308 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி வாகை சூடி உள்ளது. இதில் 22 மாநகராட்சி வார்டுகள் அடங்கும்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மாநகராட்சியில் பா.ஜ.க. அதிக வார்டுகளை கைப்பற்றி உள்ளது.

குறிப்பாக கன்னியாகுமரி மாநகராட்சியில் அதிகபட்சமாக 11 வார்டுகளை பிடித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டுகளிலும், சென்னை, கடலூர், காஞ்சீபுரம், ஓசூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இவர்களில் 9 பேர் பெண்கள் ஆவர்.

11 மாநகராட்சியில் தடம் பதித்தது

இந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் பா.ஜ.க. கால் பதித்துள்ளது. இது, தமிழக பா.ஜ.க. தலைவர்கள், தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பா.ஜ.க. 4 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நகராட்சியை பொறுத்தமட்டில் 56 வார்டுகளை பிடித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 வார்டுகளையும், தென்காசி மாவட்டத்தில் 12 வார்டுகளையும், தேனி மாவட்டத்தில் 4 வார்டுகளையும், ராமநாதபுரம், திருப்பூர் மாவட்டத்தில் தலா 3 வார்டுகளையும், ஈரோடு மாவட்டத்தில் 2 வார்டுகளையும், கரூர், கிருஷ்ணகிரி, கோவை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, நாமக்கல், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது.

மகிழ்ச்சி வெள்ளம்

பேரூராட்சியை பொறுத்தமட்டில் 230 வார்டுகளை பிடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 168 இடங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கைப்பற்றி உள்ளது.

தனித்து போட்டியிட்ட இந்த தேர்தலில் பா.ஜ.க. 308 வார்டுகளில் வெற்றி வாகை சூடி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் கால் பதித்திருப்பது பா.ஜ.க. தொண்டர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story