ஆம்பூரில் ருசிகரம்: பித்தளை காசு கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர் - பரிசாக தோல்வியை தந்த மக்கள்...!


ஆம்பூரில் ருசிகரம்: பித்தளை காசு கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர் - பரிசாக தோல்வியை தந்த மக்கள்...!
x
தினத்தந்தி 23 Feb 2022 10:41 AM IST (Updated: 23 Feb 2022 10:41 AM IST)
t-max-icont-min-icon

ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என கூறி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் நகராட்சியில் 36-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் மனமுடைந்த தி.மு.க. பிரமுகர் துரைப்பாண்டியன் என்பவர் தனது மனைவி மணிமேகலையை சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் களமிறங்கினார். வாக்காளர்கள் சுமார் 1,500 பேருக்கு ஒரு கிராம் எடையுள்ள தங்க காசு என கூறி பித்தளைகாசு வழங்கியதாக கூறப்படுகிறது.

தேர்தல் வாக்குப் பதிவு முடிந்த பிறகு தங்க காசுகளை அடகு கடைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அது தங்கம் இல்லை, பித்தளை என்பது உறுதியானது. இதனால் ஆத்திரமடைந்த 36-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கம் எனக்கூறி பித்தளைகாசு வழங்கி ஏமாற்றிய வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேலை அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த வெற்றி செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தாமரைச்செல்வி 983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சகிதா பானு 531 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். தங்கம் என கூறி பித்தளை காசு வழங்கியதாக கூறப்படும் சுயேச்சை வேட்பாளர் மணிமேகலை துரைப்பாண்டியன் 330 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதை அறிந்த 36-வது வார்டு மக்கள் ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் என கூறி மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story