கூலி உயர்வை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் தொடர் உண்ணாவிரதம்..!
பல்லடத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் விசைத்தறி கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்தக்கோரி 2-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்,
இதுகுறித்து, கோவை திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள், இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். காடா ஜவுளி துணி விற்பனையை ஆதாரமாக கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களும், அவர்கள் தரும் கூலியை அடிப்படையாக கொண்டு, விசைத்தறியாளர்களும் தொழில் செய்து வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த 24.11.2021ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், முன்னிலையில் பல்லடம் ரகத்திற்கு 20%, சோமனூர் ரகத்திற்கு 23%, கூலி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை அமுல்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி-9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை கூட்டமைப்பு நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதில் பல்லடம், சோமனுார், அவிநாசி, தெக்கலுார், புதுப்பாளையம், பெருமாநல்லுார், வேலம்பாளையம், கண்ணம்பாளையம், என, ஒன்பது சங்கங்களும் இணைந்து போராட்டத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்து சென்றன. இதற்கிடையே, சோமனுாருக்கு 19 மற்றும் இதர ரகத்துக்கு 15 சதவீத கூலி உயர்வு என்ற ஒப்பந்தத்தை ஏற்று பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், கண்ணம்பாளையம் சங்கங்கள் போராட்டத்தை திரும்ப பெற்றன.
பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என்றும், கையெழுத்து வடிவில் ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறுவோம் என சோமனுார் சங்கம் அறிவித்தது. இதேபோல், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லுார் சங்கங்களும், சோமனுார் சங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவித்தன.
கையெழுத்து வடிவிலான ஒப்பந்தம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது எனவே இன்று முதல் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் இன்று 2- பொது நாளாக நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து பிப்ரவரி 25 வரை நடைபெறும் என விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story