வாகனத்தில் இருந்து இறங்கி சென்று காட்டு யானையின் முன் அமர்ந்து கும்பிட்ட நபர்


வாகனத்தில் இருந்து இறங்கி சென்று காட்டு யானையின் முன் அமர்ந்து கும்பிட்ட நபர்
x
தினத்தந்தி 24 Feb 2022 1:30 AM IST (Updated: 24 Feb 2022 1:30 AM IST)
t-max-icont-min-icon

வாகனத்தில் இருந்து இறங்கிச்சென்று காட்டு யானையின் முன்பு அமர்ந்து ஒருவர் கும்பிட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே நேற்று காலை தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது கர்நாடக வனப்பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் ஆண் யானை ஒன்று நின்று கொண்டு இருந்தது. பெரிய தந்தங்களுடன் அந்த யானை காணப்பட்டது.

இதைப்பார்த்த பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் யானையை தங்கள் செல்போனில் படம் எடுத்தும், வீடியோ பதிவும் செய்தனர். அப்போது ஏதோ ஒரு வாகனத்தில் இருந்து இறங்கிய 40 வயது மதிக்கத்தக்க நபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் யானையை நோக்கி சென்றார். இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள் அவரை பார்த்து, யானை அருகே செல்ல வேண்டாம் என்று கூச்சலிட்டார்கள். ஆனால் அந்த நபர் அதை கண்டுகொள்ளவில்லை.

விரட்ட முயன்றார்

யானை முன்பு சென்ற அந்த நபர் அதன் முன்பு உட்கார்ந்து கும்பிட்டார். பின்னர் கீழே படுத்து வணங்கினார். அதன்பின்னர் எழுந்து யானையை விரட்ட முயன்றார்.

இதனால் யானை பின்னோக்கி சென்றது. திடீரென ஆவேசமடைந்த யானை அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. ஆனாலும் அந்த நபர் அசரவில்லை. அந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயே நின்றிருந்தார்.

தானாக காட்டுக்குள் சென்றது

யானை அவரது மிக அருகில் வந்து நின்றது. சிறிது நேரம் அச்வர் அருகிலேயே நின்று கொண்டு இருந்தது. ஆனால் அவரை எதுவும் செய்யவில்லை. பின்னர் திரும்பி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

பின்னர் அந்த நபர் ரோட்டுக்கு வந்துவிட்டார்.

பரபரப்பு

அந்த நபர் யார்?, மனநிலை பாதிக்கப்பட்டவரா? அல்லது குடிபோதையில் அப்படி நடந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Next Story