தந்தையின் குடிப்பழக்கத்தால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


தந்தையின் குடிப்பழக்கத்தால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2022 6:15 PM IST (Updated: 24 Feb 2022 6:15 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே தந்தையின் குடிப்பழக்கத்தால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் தெற்கு தெருவைச் சோ்ந்தவர் முருகன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள்.

இவர்களுடைய மகள் தங்கமுத்து மாரியம்மாள் (வயது 15). இவர் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். முருகனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் காலையில் முருகன் மதுக்குடிப்பதற்காக தனது மகள் தங்கமுத்து மாரியம்மாளிடம் இருந்து ரூ.200 வாங்கிச் சென்றார். பின்னர் வீடு திரும்பிய முருகன் மீண்டும் தனது மகளிடம் மதுக்குடிக்க பணம் கேட்டார். ஆனால், தங்கமுத்து மாரியம்மாள் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், தனது மகள் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த தங்கமுத்து மாரியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் வீட்டிற்கு மாரியம்மாள் வந்தார். தனது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிா்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தங்கமுத்து மாரியம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்காத குடும்பத்தினர் தங்கமுத்து மாரியம்மாளை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் பரிசோதனை செய்த டாக்டர்கள், தங்கமுத்து மாரியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, தங்கமுத்து மாரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தந்தையின் குடிப்பழக்கத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story