லாரியை திருடி சென்ற வாலிபர்


லாரியை திருடி சென்ற வாலிபர்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:29 PM IST (Updated: 24 Feb 2022 11:29 PM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த லாரியை திருடி சென்ற வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்

வில்லியனூர் ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது52). சொந்தமாக லாரி வைத்து புளுமெட்டல் தொழில் செய்து வருகிறார். நேற்று  இரவு லாரியை தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவு நேரத்தில் லாரியை ஓட்டி செல்லும் சத்தம் கேட்டுள்ளது. உடனே மதியழகன் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்மநபர் ஒருவர் லாரியை ஓட்டி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து உஷாரான போலீசார் லாரியை பின் தொடர்ந்து வாகனத்தில் விரட்டி சென்றனர். மேட்டுப்பாளையம் அருகே அந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
மேலும் லாரியை திருடி சென்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கணுவாபேட்டை புதுநகரை சேர்ந்த கலை என்ற விஜயகுமார் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். லாரியையும் மீட்டனர்.

Next Story