சென்னை மாநகராட்சியில் 64 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு


சென்னை மாநகராட்சியில் 64 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 12:26 AM IST (Updated: 25 Feb 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 64 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளே பெரும்பான்மை பெற்று மேயர் பதவியை தக்க வைத்துள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் மட்டுமே அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றது.

இந்தநிலையில் நடந்து முடிந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் மீண்டும் தி.மு.க. தனது பெரும்பான்மையை நிருப்பித்துள்ளது. குறிப்பாக எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 16 வார்டுகளில் 15-ல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளான திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தி.மு.க. வாகை சூடியுள்ளது.

டெபாசிட் இழப்பு

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. இதில் 15 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. சென்னை மாநகராட்சி தேர்தலில் 173 வார்டுகளில் 2-வது அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக இருந்தாலும் பல தொகுதிகளில் அக்கட்சியின் வேட்பாளர்கள் போதிய வாக்குகள் பெறாமல் வேட்புமனு தாக்கலின்போது செலுத்திய டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். அதாவது அந்த வார்டுகளில் பதிவான வாக்குகளில், ஒன்றில் 6 பகுதி (16.7 சதவீதம்) வாக்குகள் கூட அ.தி.மு.க.வுக்கு பதிவாகவில்லை.

அந்தவகையில் 111 வார்டுகளில் பதிவான வாக்குகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே அ.தி.மு.க.வுக்கு பதிவாகி உள்ளது. மேலும் 10 வார்டுகளில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை இலக்க எண்களில் வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக வார்டு எண். 25-ல் அ.தி.மு.க. வேட்பாளர் வெறும் 4 சதவீத ஓட்டுகளே பெற்றுள்ளார். இதைப்போல் சில வார்டுகளில் 7 முதல் 10 சதவீத வாக்குகளே அ.தி.மு.க.வினர் பெற்றுள்ளனர்.

64 வார்டுகள்

சென்னை மாநகராட்சியின் சில வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை விட பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சுயேச்சைகள் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர்.

இவ்வாறாக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 64 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்கள் 144 வார்டுகளில் 2-வது இடத்தையும், 35 வார்டுகளில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story