மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி


மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி
x
தினத்தந்தி 25 Feb 2022 1:19 AM IST (Updated: 25 Feb 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

மறுவாக்குப்பதிவு நடந்த புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் உள்பட 4 பேரும் டெபாசிட் இழந்தனர்.

கடலூர்,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 22-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதையடுத்து அந்த வார்டில் மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான மறுவாக்குப்பதிவு நேற்று நடந்தது. 1,170 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 814 பேர் வாக்களித்தனர். ஆனால் கடந்த 19-ந்தேதி நடந்த தேர்தலில் 927 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். பின்னர் வாக்குப்பதிவு நடந்த அதே வாக்குச்சாவடி மையத்திலேயே இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது.

வி.சி.க. வேட்பாளர் வெற்றி

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட லலிதா 622 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில் வி.சி.க. வேட்பாளரை தவிர அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். மற்ற வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க.- 4, காங்கிரஸ் -3, சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது மறுவாக்குப்பதிவில் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணி புவனகிரி பேரூராட்சியை கைப்பற்றியது.

Next Story