முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பு
திமுக தொண்டரை தாக்கிய வழக்கில், ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீஸ் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை,
தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுவை விசாரித்த ஜார்ஜ் டவுன் கோர்ட், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்ததுள்ளது.
ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதன் முழு விவரம்;
சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கடந்த 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தபோது கள்ளஓட்டு பிரச்சினை தொடர்பாக தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பிரச்சினை எழுந்தது. அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர், தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் என்பவரை சட்டையை கழற்றி அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்ந்த நரேஷ்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் 40 பேர் கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க.வினர் 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று ஓட்டுப்பதிவின்போது தனது காரை செல்ல விடாமல் போலீசார் தடுத்ததாக கூறி சாலைமறியலில் ஈடுபட்ட வழக்கிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். தி.மு.க. தொண்டரை தாக்கியதாக பதிவான வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை ஜார்ஜ் டவுன் கோர்ட்டு நிராகரித்ததை தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் ஜாமீன் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே தி.மு.க. தொண்டரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் .ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘புகார்தாரர் நரேஷ்குமாரை தாக்கி இழுத்து வந்த வீடியோவை ஜெயக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ எந்த எலக்ட்ரானிக் சாதனத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது, பகிரப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.இதன்மூலம் அந்த எலக்ட்ரானிக் சாதனத்தை கைப்பற்ற வேண்டியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களின் இருப்பிடத்தை அறிய ஜெயக்குமாரிடம் புலன் விசாரணை செய்ய வேண்டியது உள்ளது. எனவே, ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story