உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும்


உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டுக்கு திரும்பும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும்
x
தினத்தந்தி 26 Feb 2022 1:49 AM IST (Updated: 26 Feb 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் பயண செலவை அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழக மாணவர்கள் தவிப்பு

ரஷிய ராணுவம் 24-ந் தேதியன்று (நேற்று முன்தினம்) உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி பயில்வோர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையை அறிந்து, அவர்களை மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வரும் பொருட்டு, மாநில-மாவட்ட அளவில் மற்றும் டெல்லியில் தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 25-ந்தேதி (நேற்று) காலை 10 மணி வரை தமிழ்நாட்டை சேர்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழக அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாக தொடர்பு கொண்டுள்ளனர்.

பயண செலவுகள்

இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச்செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாக அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக கமிஷனரும், மாநில தொடர்பு அதிகாரியுமான ஜெசிந்தா லாசரசை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 1070 என்ற மாநில அவசர கட்டுப்பாட்டு மைய கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், அலயக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரக கமிஷனர் ஜெசிந்தா லாசரசை 9445869848, 9600023645, 9940256444, 044-28515288 என்ற எண்களிலும், nrtchennai@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

டெல்லியில் தமிழ்நாடு பொதிகை இல்லத்தில் உள்ள உக்ரைன் அவசர உதவி மையத்தை 9289516716 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், ukrainetamils@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story