வைரலான திருடன் வாக்குமூலம்: வீடியோ எடுத்த பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!


வைரலான திருடன் வாக்குமூலம்: வீடியோ எடுத்த பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
x
தினத்தந்தி 26 Feb 2022 8:34 PM IST (Updated: 26 Feb 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

போலீசாரை தெறிக்கவிட்ட பொழுதுபோக்கு பைக் திருடனின் வாக்குமூல வீடியோவை எடுத்த பெண் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தேனி,

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் திருட முயன்ற நபரை பிடித்த அப்பகுதிமக்கள், பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(வயது31) என்றும், பால் வியாபாரியின் இரு சக்கர வாகனத்தை திருடியவர் என்பது தெரியவந்தது.  இந்த திருட்டு சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரணை நடத்தினார்.

அப்போது ராதாகிருஷ்ணன், தூய தமிழில் கவிதை நடையிலும், ஆங்கிலத்திலும் வாக்குமூலம் அளித்தார். தன்னை நடிகர் அஜித்குமார் ரசிகர் என்று அறிமுகம் செய்து கொண்டு அவர் அளித்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் வயிறு குலுங்க சிரித்தனர். 

மேலும் விசாரணையில் அவர் போதைக்கு அடிமையாகி, ஒரு மனநல காப்பகத்தில சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்றும், சாவியுடன் யாராவது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து இருந்தால் அதை திருடி ஓட்டுவதும், பெட்ரோல் தீர்ந்து போனாலோ, பழுதாகி விட்டாலோ எங்காவது நிறுத்திவிட்டு சென்று விடுவதை பொழுதுபோக்காக செய்து வருவதாகவும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த விசாரணை பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையாக, இன்ஸ்பெக்டர் மதனகலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு உத்தரவிட்டார்.

உடனடியாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் மதனகலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர், அவர் மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.


Next Story