அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை


அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை
x
தினத்தந்தி 26 Feb 2022 11:34 PM IST (Updated: 26 Feb 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களை தாக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

மாணவர்களை தாக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
அரசு பள்ளி
வில்லியனூர் அருகே உள்ள மணக்குப்பம் பகுதியில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நடுக்குப்பம், நல்லாத்தூர், மேலக்குப்பம், ராசாப்பாளையம், சங்கரன்பேட்டை, ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 
சம்பவத்தன்று வகுப்பறையில் கூச்சலிட்டதாக கூறி ஆசிரியர் ஒருவர் மாணவர்களை மேஜையின் மீது ஏறி நிற்க வைத்து பிரம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கை, கால், முதுகில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
மாணவர்கள் மீது தாக்குதல்
கடந்த சில நாட்களுக்கு முன் கூட மாணவர் ஒருவரை தாக்கியதில் மாணவரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவரின் பெற்றோர் மங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். இனிமேல் மாணவர்களை அடிக்கமாட்டேன் என்று உறுதி அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டனர்.
இருப்பினும் மாணவர்களை தொடர்ந்து அவர் தாக்கி வருவது பெற்றோர்களிடையே பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சம் அடைந்துள்ளனர். 
பள்ளி முற்றுகை
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியை பேச்சுவார்த்தை நடத்தினார். இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்வதாக உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது தான் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஆசிரியர் மாணவர்களை இதுபோன்று அடித்து துன்புறுத்தியுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கே பயந்து வருகின்றனர்.
எனவே கல்வித்துறை அமைச்சர், இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர் இந்த விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story