சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் மறுவாழ்வு மையம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை மியாட் ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
சுவாசம், நரம்பியல், எலும்பியல், இதயம், வாஸ்குலர், செரிமானம் மற்றும் மனநலம் என அனைத்து மறுவாழ்வு அம்சங்களையும் ஒருங்கிணைத்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரி வளாகத்தில், ‘மியாட் மறுவாழ்வு மையம்' தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக நேற்று முன்தினம் திறந்து வைத்தார். அப்போது, மியாட் ஆஸ்பத்திரியின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பிருத்வி மோகன்தாஸ் உடன் இருந்தார்.
முழுமையான உடல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்குவதே இந்த மையத்தின் நோக்கம் ஆகும். நோயாளிகள் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த மையம் 2-வது வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்றால் அது மிகையல்ல. மறுவாழ்வு மையம் மூலம் நுரையீரல் மீட்பு, நரம்பியல் மீட்பு, ‘பிசியோதெரபி', தொழில்சார் சிகிச்சை, பேச்சு மற்றும் விழுங்குதல் சிகிச்சை, ‘நியூரோ மாடுலேஷன்', புற்றுநோய் மறுவாழ்வு, கடுமையான மற்றும் நாள்பட்ட வலி மேலாண்மை, இதய மீட்பு, தொடர் அழுத்த காயங்கள் தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன.
நீண்ட காலம் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள், நரம்பு, முதுகெலும்பு அல்லது விபத்து தொடர்பான காயங்கள் காரணமாக அசைவுகள் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் அல்லது நாள்பட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், பேச்சு மற்றும் விழுங்கும் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு மையம் மூலம் பயன் பெறலாம். பிரத்யேக உள்நோயாளிகள் படுக்கைகளுடன் 3 மாடி ‘ரிட்ரீட் பிளாக்' முழுவதும் இந்த மையம் செயல்படுகிறது.
ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு பிந்தைய முழுமையான மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கும் இதுபோன்ற வகைகளில் தென்னிந்தியாவில் முதலாவது மையம் ஆகும். சிகிச்சை அளிக்கும் டாக்டரின் வழிகாட்டுதலுடன் அர்ப்பணிப்பு உணர்வும், அனுபவமும் வாய்ந்த மறுவாழ்வு சிகிச்சையாளர்கள் குழுவினர் உள்ளனர். உள்நோயாளியாகவோ, வெளி நோயாளிகளாகவோ சேவைகளை பெறலாம். சமீபத்திய மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன், விரைவான மீட்புக்கு இந்த மையம் உதவுகிறது. நோயாளிகளின் பாதுகாப்புக்காக கடுமையான கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
மேற்கண்ட தகவல் மியாட் ஆஸ்பத்திரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story