உக்ரைனில் சிக்கி தவிக்கும் காட்பாடி மருத்துவ மாணவி
உக்ரைனில் காட்பாடியை சேர்ந்த மருத்துவ மாணவி சிக்கி உள்ளார்.
வேலூர்,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அங்கு சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர். அவர்களும் பரிதவிக்கின்றனர்.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கு மருத்துவம் படிக்க சென்ற வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்துள்ள லத்தேரி பள்ளத்தூரை சேர்ந்த அபிநயா (வயது 22) என்ற பெண்ணும் அங்கு சிக்கி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
பள்ளத்தூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கோமதி. இவர்களது ஒரே மகள் அபிநயா. இவர் உக்ரைன் நாட்டில் உள்ள வின்னிஸ்டா என்ற மாநிலத்தில் 5-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். தற்போது போர் நிலவுவதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். அவரை பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அபிநயா கூறியதாவது:-
தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வின்னிஸ்டாவில் சிக்கி உள்ளனர். எங்கள் பகுதியின் அருகில் உள்ள ஒரு நாட்டின் எல்லை மூடப்பட்டுள்ளது. எனவே எங்களை ருமேனியா நாட்டு வழியாக இந்தியா அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். எங்களுக்கு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ருமேனியா நாட்டுக்கு சென்று அங்கிருந்து இந்தியா திரும்ப உள்ளோம். தற்போது பாதுகாப்பாக உள்ளோம். விரைவில் தமிழகம் திரும்புவேன் என்றார்.
அவர் மற்றும் அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story