சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு தொடர்பா?


சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு தொடர்பா?
x
தினத்தந்தி 27 Feb 2022 6:12 AM IST (Updated: 27 Feb 2022 6:12 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஏட்டு, மதுரை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் அழைத்து சென்றனர்.

சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைதான சாத்தான்குளம் போலீஸ் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ்காரர்கள் முருகன், முத்துமுருகன் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சாட்சிகள் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சாட்சியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி, சாட்சியம் அளித்தார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. சிறையில் உள்ள போலீசார் தரப்பு வக்கீல்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் கூறியதாவது:-

இந்த இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியாக அரசு டாக்டர் பாலசுப்பிரமணியன் கருதப்படுகிறார். அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

அதில், படுகாயங்களுடன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளித்தேன். அப்போது இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டது? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் இருவரும், சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் வைத்து எங்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் நாங்கள் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளோம். போலீசாரின் தாக்குதலால்தான் இந்தநிலைக்கு ஆளாகியுள்ளோம் என்று தந்தை-மகன் தெரிவித்ததாக டாக்டர் பாலசுப்பிரமணியன் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த சாட்சியமானது, இந்த வழக்கில் முக்கியமானதாக கருதப்படுகிறது. அடுத்ததாக வருகிற 5-ந்தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்சு புகழ் வாசுகி சாட்சியம் அளிக்கிறார்.

இவ்வாறு வக்கீல் தெரிவித்தார்.

இதற்கிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜெயராஜ், ெபன்னிக்ஸ் தாக்கப்பட்டதில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கு விசாரணை நடந்து வரும் மதுரை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவை, அவருடன் பணியாற்றி தற்போது சாத்தான்குளம் வழக்கில் சிறையில் இருக்கும் ஏட்டு முருகன்தான் தாக்கல் செய்திருப்பதால் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. சாத்தான்குளம் வழக்கில் 4-வது குற்றவாளியாக ஏட்டு முருகன் சேர்க்கப்பட்டு உள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனும், இந்த இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளி ஆக வேண்டியவர். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. எனவே அவரையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்த்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட விசாரணையின்போது இந்த மனுவும் விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிகிறது.

இதுவரை இந்த வழக்கில் கைதான போலீசாரை தவிர, சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மற்ற போலீஸ்காரர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் எழவில்லை. இந்தநிலையில், சாட்சியாக சேர்க்கப்பட்ட ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மீது சக ஏட்டுவே குற்றம் சுமத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story