உக்ரைனில் உணவு, குடிநீரின்றி பதுங்குமிடத்தில் தவிக்கும் பேரணாம்பட்டு மாணவர்


உக்ரைனில் உணவு, குடிநீரின்றி பதுங்குமிடத்தில் தவிக்கும் பேரணாம்பட்டு மாணவர்
x
தினத்தந்தி 27 Feb 2022 6:12 AM IST (Updated: 27 Feb 2022 6:12 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் எந்த நேரத்திலும் குண்டு வெடிக்கும் அபாயம் உள்ள நிலையில் உணவு, குடிநீரின்றி தவிக்கும் பேரணாம்பட்டு மாணவர் இந்திய அரசு உடனடியாக தன்னை மீட்க வேண்டும் என வீடியோ காலில் வேண்டுகோள் விடுத்தார்.

பேரணாம்பட்டு,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைப்பதற்காக அண்டை நாட்டுக்கு அகதிகளாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் படித்து வரும் மாணவர்கள் உள்பட 18 ஆயிரம் இந்தியர்கள் அபாயத்தில் உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்திய தூதரகம் மூலம் மீட்பதற்கான முயற்சியில் இந்திய வெளியுறவுத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகரான கீவிற்கு, கிழக்கு பகுதியில் உள்ள கார்கிவ் நகரத்தில் அமைந்துள்ள வி.என். கராசின் கார்கிவ் நேஷனல் மருத்துவ பல்கலை கழகத்தில் பேரணாம்பட்டு டவுன் தாதாவீதியை சேர்ந்த சையத் அப்ரார் என்பவரின் மகன் சையத் அக்யார் அஹம்மத் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

இவர் இந்தியாவை சேர்ந்த சக மாணவர்களுடன் குண்டு புகாத பாதுகாப்பான குடிலில் சிக்கி தவிப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து பேரணாம்பட்டு வருவாய் துறையினர் மருத்துவ மாணவர் அக்யார் அஹம்மது குறித்த விபரங்களை சேகரித்து வேலூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாணவர் அக்யார் அஹம்மதிடம் செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டபோது அவர் பேசியதாவது:-

பாதுகாப்பான பதுங்கும் இடத்தில் சக மாணவர்கள் 10 பேருடன் தங்கி உள்ளேன்.

மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை கடும் பனி பொழிவு வாட்டுவதாகவும், இதனால் ஜீரம் ஏற்பட்டுள்ளது என்றும் தாம் தங்கியுள்ள இடத்தில் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், குடிக்க சுகாதாரமான தண்ணீர் இல்லாததால் அங்குள்ள ஒரு குழாயில் உள்ள தண்ணீரை பிடித்து அருந்தி வருகிறோம்.மாலை 5 மணியளவில் (உக்ரைன் நாட்டு நேரப்படி) பக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு செல்ல முயன்ற போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் மிகவும் பயங்கரமாக கேட்டது. அப்போது புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் உயிருக்கு பயந்து கொண்டு நாங்கள் அனைவரும் தங்கியுள்ள இடத்திற்கு திரும்பி வந்து விட்டோம்.

நாங்கள் தங்கியுள்ள பகுதியில் எந்த நேரத்திலும் குண்டு வெடிக்கலாம், உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள எங்களை பாதுகாப்பாக மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story