அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பகுதி நேர ஆசிரியையிடம் ரூ.17 லட்சம் மோசடி..!
அரசு பள்ளியில் வேலை வாங்கி தருவதாக பகுதி நேர ஆசிரியையிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், இவரது மனைவி தனம் (30). இவர் இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு செல்போன் மூலமாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் அரசு வேலைக்கு நீங்கள் செல்ல நீங்கள் விரும்பினால் இந்த செயலியை லிங்கை கிளிக் செய்து தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை நம்பி செயலிக்கு உள்ளே சென்று தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் இருந்த நபர் மீண்டும் அவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், நீங்கள் குறிப்பிட்ட பணத்தை செலுத்தினால் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதை நம்பி தினமும் சிறுக சிறுக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் ரூ.17 லட்சத்து 33 ஆயிரத்து 815 பணத்தை அந்த நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் அந்த மர்ம நபர் கூறியது போல அரசாங்க வேலை குறித்து எந்த ஒரு அறிவிப்பும் சான்றிதழும் தராததால். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர் இதுபற்றி அவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story