தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்: கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்து கொன்ற பிளஸ்-1 மாணவர்


தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரம்: கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்து கொன்ற பிளஸ்-1 மாணவர்
x
தினத்தந்தி 28 Feb 2022 1:14 AM IST (Updated: 28 Feb 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

தாயிடம் தகராறு செய்ததால் தந்தையை கிரிக்கெட் மட்டையால் அடித்து பிளஸ்-1 மாணவர் கொலை செய்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி முல்லை நகரை சேர்ந்தவர் ஓமந்தூரான் (வயது 43). அவருடைய மனைவி பாண்டீஸ்வரி (36). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இதில், மகன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பும், மகள் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஓமந்தூரான், கேரள மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

இதற்காக அவர், கேரளாவுக்கு சென்றுவிட்டு வாரத்தில் ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்வார். இந்த நிலையில் பாண்டீஸ்வரிக்கு திண்டுக்கல்லில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை விற்று பணம் தரும்படி ஓமந்தூரான் தனது மனைவியிடம் கேட்டு வந்தார். ஆனால், அதற்கு பாண்டீஸ்வரி சம்மதிக்காததால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அடித்துக்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஓமந்தூரான் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் பாண்டீஸ்வரியிடம் வழக்கம்போல் தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது.

அப்போது, தடுக்க வந்த மகளையும் அவர் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவன், வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் தந்தை என்றும் பாராமல் ஓமந்தூரானை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஓமந்தூரான், சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

போலீசில் சரண்

இதைத்தொடர்ந்து அவன், சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் கோர்ட்டில்ஆஜர்ப்படுத்தி, மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைத்தனர்.

Next Story