உக்ரைனில் சிக்கி தவித்த 21 தமிழக மாணவர்கள் நாடு திரும்பினர்


உக்ரைனில் சிக்கி தவித்த 21 தமிழக மாணவர்கள் நாடு திரும்பினர்
x
தினத்தந்தி 28 Feb 2022 4:51 AM IST (Updated: 28 Feb 2022 4:51 AM IST)
t-max-icont-min-icon

ரஷிய தாக்குதலால் உருக்குலைந்த உக்ரைனில் சிக்கி தவித்த 21 தமிழக மாணவர்கள் உள்பட 900 இந்தியர்கள் 4 விமானங்கள் மூலம் நாடு திரும்பினர். சென்னை வந்த மாணவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

ரஷியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது.

அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள்

போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள்.

மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

907 இந்தியர்கள் மீட்பு

இதன்படி நேற்று முன்தினம் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து 219 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் சிறப்பு மீட்பு விமானம் மாலையில் மும்பை வந்து சேர்ந்தது. அவர்களை மத்திய மந்திரி பியூஸ் கோயல் வரவேற்றார்.

அதன்பின்னர், 5 தமிழக மாணவர்கள் உள்பட 250 பேருடன் வந்த 2-வது விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு தலைநகர் டெல்லியை வந்தடைந்தது. 12 தமிழக மாணவர்களையும் சேர்த்து 240 பேருடன் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இருந்து புறப்பட்ட 3-வது இந்திய விமானம் நேற்று காலை 9.20 மணிக்கு இந்திய தலைநகரை வந்தடைந்தது. 4 தமிழக மாணவர்கள் உள்பட 198 பேருடன் 4-வது மீட்பு விமானம் நேற்று மாலை 5.25 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது.

இவ்வாறு 4 விமானங்கள் மூலமாக இதுவரை 21 தமிழக மாணவர்கள் உள்பட 907 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் உக்ரைனில் சிக்கியுள்ள நிலையில் அவர்களையும் மீட்கும் விதமாக 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 5 விமானங்கள் புகாரெஸ்டுக்கும், 2 விமானங்கள் புடாபெஸ்டுக்கும் அனுப்பப்படுகிறது.

தமிழக அரசு நடவடிக்கை

உக்ரைனில் சிக்கி தவித்து வரும் தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் மத்திய அரசுடன், தமிழக அரசும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தங்களது பிள்ளைகளை பத்திரமாக மீட்கக்கோரி பெற்றோர் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சென்னையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காணொலி காட்சி மூலம் உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களிடம் பேசி நம்பிக்கை அளித்தார். தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு முழு முனைப்பு காட்டி வந்தது.

சென்னை வந்த மாணவர்கள்

இந்தநிலையில், உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்த தமிழக மாணவர்கள் 5 பேர் நேற்று விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தனர். இதில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஷகிர்அபுபக்கர், திருவல்லிக்கேணியை சேர்ந்த ஹரிஹர சுதன், சேலம் மாவட்டத்தை சேர்ந்த சாந்தனு பூபாலன், அறந்தாங்கியை சேர்ந்த செல்வபிரியா, தேனியை சேர்ந்த வைஷ்ணவிதேவி ஆகிய 5 தமிழக மாணவர்களும் அடங்குவார்கள்.

இவர்களுடன் கேரளாவை சேர்ந்த மாணவர்களும் வந்தனர். முன்னதாக விமானத்தில் வரும் பிள்ளைகளை வரவேற்பதற்காக அவர்களது பெற்றோர், உறவினர்கள் என ஏராளமானோர் சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.

உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் சென்னைக்கு பத்திரமாக வந்து சேரும் பிள்ளைகளை பார்க்க பெற்றோர் ஆவலுடன் காத்திருந்தனர். இதனால் சென்னை விமான நிலையம் நேற்று அதிகாலை பரபரப்பாக காணப்பட்டது.

பெற்றோர் நெகிழ்ச்சி

தமிழக மாணவர்கள் 5 பேரையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். போர் முனையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு சென்னை திரும்பிய மாணவர்களை அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர். இதனால் விமான நிலைய வளாகமே நெகிழ்ச்சி நிறைந்த வளாகமாக மாறிவிட்டது.

பின்னர் மாணவர்கள் 5 பேரும் அவர்கள் இல்லங்களுக்கு செல்வதற்கான வாகன வசதி, உணவு ஏற்பாடு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசே மேற்கொண்டது. அதனைத்தொடர்ந்து மாணவர்கள் 5 பேரும் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டனர்.

மாணவர்களை வரவேற்ற அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு முயற்சி

உக்ரைனில் சிக்கி தவித்த மாணவர்களை மிக பாதுகாப்புடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மற்றும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் முதல்கட்டமாக 5 மாணவர்களை மீட்டு வந்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்து இருக்கிறோம். இதனைத்தொடர்ந்து தமிழக மாணவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு செல்வதற்கான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. முதல்-அமைச்சரை காணவேண்டிய சூழல் ஏற்படும் பட்சத்தில் மாணவர்கள் அவரிடம் அழைத்து செல்லப்படுவார்கள்.

தமிழகத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் படிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். அதில் 1,800 மாணவர்களின் பதிவேடு எங்கள் துறை சார்பில் பதிவுசெய்யப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 500 பேருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் இருந்தும் மாணவர்களை அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் தமிழக அரசும், மத்திய அரசும் முனைப்புடன் செயல்படுகிறது. மற்ற மாணவர்களையும் பாதுகாப்புடன் அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறியதாவது:-

அதே இடத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு...

உக்ரைன் நாட்டின் கீவ் மற்றும் கராக்கோ பகுதிகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களை அதே இடத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு உக்ரைனின் உள்ள நமது தூதரகம் சொல்லி இருக்கிறது. அந்த இடத்தில் போர் நடந்து வருவதால் மீட்பு நடவடிக்கையை தொடங்க முடியவில்லை.

அவர்களுடன் நாங்கள் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களை அதே இடத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு கூறியிருக்கிறோம். வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேசி வருகிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், மாணவர்களை எப்படி வெளியே அழைத்து வருவது என்ற ஒரு பாதை கிடைத்துவிட்டால் அந்த வழியாக அவர்களை அழைத்து வந்து விடுவோம் என்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வந்தது எப்படி?

முதல்கட்டமாக தமிழகம் வந்த ஷகிர், ஹரிஹர சுதன், சாந்தனு பூபாலன், செல்வபிரியா, வைஷ்ணவி ஆகிய 5 பேரும் உக்ரைனில் செர்னிவ்ட்ஸி நகரில் உள்ள புக்கோவினியன் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் ஆவார்கள்.

இவர்கள் நேற்று முன்தினம் தங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து பஸ் மூலமாக ருமேனியா எல்லை பகுதிக்கு வந்துள்ளனர். எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை தொடர்ந்து போக்குவரத்து முடக்கப்பட்டதால், 8 கி.மீ. நடந்தே எல்லைப்பகுதியை கடந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து பஸ் மூலமாக 7 கி.மீ. தூரம் கடந்து விமான நிலையம் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்து, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலமாக சென்னை வந்தடைந்துள்ளனர்.

மேலும் 12 பேர் வருகை

இதற்கிடையே டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு மேலும் 12 தமிழக மாணவர்கள் விமானம் மூலமாக வந்தனர். அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதன் மூலம் உக்ரைனில் தவித்த 17 பேர் நேற்று சென்னை திரும்பி உள்ளனர்.

Next Story