டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல் பால் வியாபாரி சாவு 3 பேர் படுகாயம்


டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய  கார்  அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதல் பால் வியாபாரி சாவு  3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Feb 2022 10:16 PM IST (Updated: 28 Feb 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

தவளக்குப்பத்தில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் பால் வியாபாரி பலியானார். குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாகூர்
தவளக்குப்பத்தில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் பால் வியாபாரி பலியானார். குழந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாறுமாறாக ஓடிய கார்

பாகூர் அருகே உள்ள கிருமாம்பாக்கம் தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 56). பால் வியாபாரி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.  காலை வழக்கம் போல் புதுச்சேரியில் பால் வினியோகம் செய்து விட்டு தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் படகு குழாம் அருகே பாலத்தில் ரவிச்சந்திரன் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் திடீரென முன் சக்கர டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் எதிரே வந்த ரவிச்சந்திரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அத்தோடு நிற்காமல் அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மீதும் அந்த கார் மோதியது.

பால் வியாபாரி பலி

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ரவிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்தார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
மேலும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த சேலியமேட்டை சேர்ந்த சந்தோஷ் குமார் (43), அவரது குழந்தை ஹேமநாத் (5) மற்றும் புதுவையை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ்  இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story