முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 March 2022 4:36 AM IST (Updated: 1 March 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை ராயபுரத்தில் கள்ள ஓட்டு போடுவதாக கூறி தி.மு.க. தொண்டர் ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அப்போது அந்த தி.மு.க. பிரமுகரின் சட்டையை அ.தி.மு.க.வினர் கழற்றி அழைத்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனைத்தொடர்ந்து அந்த தி.மு.க. பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க.வினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது ஜெயக்குமார் புழல் சிறைச்சாலையில் இருக்கிறார்.

ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்

சென்னை மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, நா.பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், பி.சத்யா, கே.பி.கந்தன், எம்.கே.அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர். அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, செய்தி தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, மாநில-மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஜெயக்குமாரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Next Story