ஆசைவார்த்தை கூறி மாணவி பாலியல் பலாத்காரம் ... டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
பொள்ளாச்சி அருகே ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 20). டிரைவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 17 வயதுடைய பிளஸ்-1 மாணவியை காதலித்தார். அப்போது, விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியை வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே விக்னேஷ் அந்த மாணவியை பழனிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே பள்ளி சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கடந்த 18.6.2019 அன்று ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில், விக்னேஷ் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம், போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு நீதிபதி குலசேகரன் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் விக்னேசுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story