ஓசூரில் பயங்கரம்: ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை
ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி ,
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் உதயகுமார் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.
இவர் நேற்று இரவு 10.30 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள புங்க மரத்தின் அடியில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் உதயகுமாரை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டினார்கள். இதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இந்த நிலையில் உதயகுமார் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு தகவல்கள்:-
கொலை செய்யப்பட்ட உதயகுமார், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 12, 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர். உதயகுமார் ஓசூரின் பிரபல ரவுடி கஜாவின் நண்பர் ஆவார்.
கஜா மீது தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி, ஓசூர் தி.மு.க. பிரமுகர் மன்சூர், பெயிண்டிங் காண்டிராக்டர் லோகேஷ் ஆகிய 3 பேரை கொலை செய்த வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 2020-ல் உதயகுமார், நாகராஜ் என்பவரை வெட்டி கொலை செய்ய முயன்றதாக மத்திகிரி போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது. அந்த வழக்கு வருகிற 8-ந் தேதி ஓசூர் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.
இதைத் தவிர குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க காவல் துறை சார்பில் 110 நன்னடத்தை விதியின் கீழ் எழுதி வாங்கப்படும். அந்த வகையில் உதயகுமாரிடம் போலீசார் எழுதி வாங்கி இருக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தல்:-
கொலை செய்யப்பட்ட உதயகுமாரின் சகோதரர் சுரேஷ், குறிப்பிட்ட கட்சி ஒன்றில் 36 வது வார்டில் போட்டியிட சீட் கேட்டார். அப்போது அவருக்கு சீட் கொடுக்கவில்லை. அங்கு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அந்த வேட்பாளருக்கு உதயகுமார் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தவிர ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் ரீதியாகவும் உதயகுமாருக்கு சிலருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story