உக்ரைனில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி


உக்ரைனில் சிக்கித் தவிக்கும்  புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி
x
தினத்தந்தி 1 March 2022 8:02 PM IST (Updated: 1 March 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

அரியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் உள்ள முகம் மற்றும் தாடை சீரமைப்பு துறையின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்  கடற்கரை சாலையில் நடந்தது. ஊர்வலத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, கல்லூரி முதல்வர் செந்தில்நாதன், பொது மேலாளர் சவுந்தரராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் கடற்கரை சாலையில் தொடங்கி அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கவசங்கள்

ஹெல்மெட் அணிவதால் விபத்துகள் ஏற்படும்போது உயிரிழப்புகளை தடுக்கும். தலைக்கவசமும், முகக்கவசமும் உயிர் கவசங்கள். முகக்கவசம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்துவதைவிட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோல் ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது.
உக்ரைனில் இருந்து மாணவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று எந்தவித பாகுபாடும் பார்க்கப்படாமல் மீட்கப்படுகின்றனர். நமது நாட்டை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். உக்ரைனில் மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இல்லை. வெவ்வேறு பகுதிகளில் உள்ளனர். எல்லைக்கு அருகில் இருப்பவர்களை மீட்பது சுலபமாக இருந்தது.

மீட்கப்படுவார்கள்

ரஷியாவை ஒட்டியுள்ள பகுதிகளிலும், உட்பகுதிகளிலும் உள்ள மாணவர்களை மீட்பதில் சற்று சிரமம் இருக்கிறது. அனைத்து மாணவர்களையும் மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் 4 மத்திய மந்திரிகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாணவர்கள் மீது மத்திய அரசு அந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளது.
புதுச்சேரி மாணவர்களும் நிச்சயமாக மீட்கப்படுவார்கள். அரசும், கவர்னர் அலுவலகமும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் தொடர்பில் உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தொடர்புகொள்ளும்போது தைரியமாக இருக்க சொல்லுங்கள். பெற்றோரும் துணிவுடன் இருக்கவேண்டும்.

முழு முயற்சி

உக்ரைனில் அதிக குளிர் இருப்பதாகவும், உணவு தட்டுப்பாடு இருப்பதாகவும் கேள்விப்படுகிறோம். மாணவர்களை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது.
காரைக்கால் மீனவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவையில் 85 சதவீதத்துக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 3-வது அலை தீவிரமாக இல்லாமல் போனதற்கு காரணம் தடுப்பூசிதான்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.


Next Story